ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் பகுதிகளில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு

ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் பகுதிகளில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு
X

காவல்துறையினர் முன்னிலையில் அழிக்கப்பட்ட ஜாதிய அடையாங்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் மற்றும் குரும்பூர் பகுதிகளில் இருந்த ஜாதிய அடையாளங்கள் காவல் துறையினர் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் பயனாக ஏற்கெனவே புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பேருந்து நிறுத்தம் போன்றவற்றில் இருந்த 101 ஜாதி அடையாளங்களை கிராம மக்கள் தானாகவே வந்து வெள்ளை பெயிண்டால் அழித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் பகுதிக்கு செல்லும் வாய்க்கால்கரை சாலையில் உள்ள பேட் துரைசாமிபுரம், நலங்குடி, இசக்கியம்மாள்புரம், ஸ்ரீபராங்குசநல்லூர் மற்றும் ஆழ்வார்தோப்பு உட்பட சில கிராமங்களில் இருந்த மின் கம்பங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ஊர் பெயர் பலகைகள் போன்றவற்றில் இருந்த 7 ஜாதி அடையாளங்களை கிராம பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் தாமாக முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் அழித்து உள்ளனர்.

அதேபோன்று குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பலப்பிறப்பு பகுதியில் 18 மின்கம்பங்கள் மற்றும் ஒரு பேருந்து நிழற்கூடம் ஆகியவற்றில் இருந்த ஜாதிய அடையாளங்களையும், வீரமாணிக்கம் கிராம பகுதியில் 12 மின்கம்பங்களில் இருந்த ஜாதிய அடையாளங்களையும் அந்தக் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் வெள்ளை நிற பெயிண்டால் அழித்து உள்ளனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!