ஸ்ரீவைகுண்டம் மருதூர் மேலக்காலில் சிறப்பு தூர்வாரும் பணிகள் தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் மருதூர் மேலக்காலில் சிறப்பு தூர்வாரும் பணிகள் தொடக்கம்
X

ஸ்ரீவைகுண்டம் மருதூர் மேலக்காலில் சிறப்பு தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் மருதூர் மேலக்காலில் சிறப்பு தூர்வாரும் பணியினை ஆட்சியர் செந்தில்ராஜ் தொடக்கி வைத்தார்

தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் மருதூரில் அணைக்கட்டு உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் வடகால் மற்றும் தென்கால் என இரண்டாக பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, மருதூர் அணையில் இருந்து மேலக்கால் மற்றும் கீழக்கால் என பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அணைக்கட்டுகள் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டம் மருதூர் மேலக்காலில் சிறப்பு தூர்வாரும் பணி இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மருதூர் மேலக்கால் தாமிரபரணி ஆற்றுப்பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெறும் கால்வாய் ஆகும். இதன் நீளம் மருதூர் அணைகட்டில் இருந்து கிளாகுளம் வரை சுமார் 17.5 கிலோ மீட்டர் தொலைவு ஆகும். இதில், 29 நேரடி மதகுகள் மற்றும் 16 குளங்கள் மூலம் 12762 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மருதூர் மேலக்கால் 17.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பயணிக்க வேண்டியிருப்பதாலும், பிறகு வெள்ளுர், தென்கரை, நெச்சிகுளம், கீழப்புதுக்குளம், முதலைமொழி, வெள்ளரிக்காயூரணி வரை கடை மடை பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் சிரமம் உள்ளது.

எனவே, தற்போது மருதூர் மேலக்கால் முழுவதும் அமலைச்செடிகள் அதிகமாக உள்ளதால் கால்வாய் தூர்ந்துள்ளது. மருதூர் அணைக்கட்டு முதல் வசவப்புரம் வரை 5.5 கிலோ மீட்டர் செல்கிறது. இந்த பகுதிகளில் அமலைச்செடிகள் அதிகமாக உள்ளதாலும் சிறப்பு தூர்வாரும் பணிக்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது. சிறப்பு தூர்வாரும் பணியை முடிக்கும்பட்சத்தில் மருதூர் மேலக்கால் வாய்காலின் கீழ் உள்ள 12762 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா