தாமிரபரணி ஆறு பிறந்தநாள்: 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு
தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
வைகாசி விசாகம் அன்று தான் தாமிரபரணியை அகத்தியர் தனது கமண்டல நீரில் இருந்து பொதிகைமலையில் விட்டு நதியை ஓடச் செய்தார் என்று தாமிரபரணி மகாத்மியம் கூறுகிறது. தாமிரபரணி நதி பரணி என போற்றபட்டாலும் வைகாசி விசாக நட்சத்திரத்தில் தோன்றியவள் என்ற கூற்றும் தாமிரபரணி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தான் வைகாசி விசாகம் தாமிரபரணி நதியில் பெருமையாகப் போற்றப்படுகிறது.
வைகாசி விசாக நாளில் தான் குபேரன் தாமிரபரணி நதியில மூழ்கி தனது இழந்த பொருளை மீட்டார். நம்மாழ்வார் பிறந்தது இந்த தினத்தில் தான். முருகப்பெருமான் அவதாரமும் வைகாசி விசாகத்தில் தான் நடைபெறுகிறது. இந்தநாளில் தாமிரபணியில் எங்கு குளித்தாலும் 12 வருடத்துக்கு ஒரு முறை கும்பகோணம் மகாமகத்தில் குளித்த புண்ணியம் கிட்டுகிறது. இந்த பெருமை கொண்டு தாமிரபணிக்கு பிறந்த நாளை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் பல்வேறு பூஜை நடைபெறுகிறது. இந்த வருடம் மழை வேண்டியும் தாமிரபரணி கரையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு, நதிக்கு அபிசேகம் செய்து பூஜை நடந்தது. இதையட்டி தாமிரபரணி நதிக்கரை அருகே உள்ள முத்தாலங்குறிச்சி வீரபாண்டிஸ்வரர் என்ற முகில் வண்ணநாதர், முக்குறுணி அரிசி பிள்ளையார், லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
அதன்பின் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்று நடப்பட்டது. அதைதொடர்ந்து முத்தாலங்குறிச்சி நல்லபிள்ளைபெற்ற குணவதியம்மன் கோயிலில் சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. பின் கோவிலில் இருந்து கும்பம் எடுத்து ஊர்வலமாக வந்து தாமிரபரணி நதிக்கு 21 வகையான அபிசேகங்கள் செய்து கும்பநீரும் ஊற்றி அபிசேகம் செய்யப்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட மழை வேண்டி ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி தலைமை வகித்து பூஜைகளை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu