ஸ்ரீவைகுண்டம் இளைஞர் மாயாண்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது

ஸ்ரீவைகுண்டம் இளைஞர் மாயாண்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது
X

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தெய்வகண்ணன்.

ஸ்ரீவைகுண்டம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியை சேர்ந்த சுடலை என்கிற மாயாண்டி (33) கடந்த 03.08.2023 அன்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக மாயாண்டி கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையெடுத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட செய்துங்கநல்லூர் போலீசார் மாயாண்டி கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் இசக்கிபாண்டி(50) உட்பட சிலரை கைது செய்தனர். இருப்பினும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியை சேர்ந்த தெய்வ கண்ணன் (35) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாப பிள்ளை மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரெட்ரிக்ராஜன் மற்றும் தலைமைக் காவலர்கள் காசி, மணிகண்டன், காவலர்கள் பிரபுபாண்டி மற்றும் முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தெய்வ கண்ணனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்தும், அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு