ஆழ்வார்திருநகரி பகுதியில் விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் மண் எடுக்க அனுமதி

ஆழ்வார்திருநகரி பகுதியில் விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் மண் எடுக்க அனுமதி
X

கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மண் எடுக்கும் விவசாயிகள்.

ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மண் எடுக்கும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மண் எடுக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் 13.09.2023 அன்று மக்கள் களம் என்ற தலைப்பில் மக்களிடம் குறைகேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள் பலர், கடம்பாகுளம் தூர்வாருவதற்கும், கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மண் எடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விவசாயிகளிடம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு டிராக்டர் மூலம் விலையில்லாமல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் மண் எடுக்கும் பணிகளை திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், ஏரல் வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் களம் என்ற தலைப்பில் நடைபெற்ற மக்களிடம் குறைகேட்டல் நிகழ்ச்சியில் மனு அளித்த உடனேயே நடவடிக்கை எடுத்து மண் எடுக்க அனுமதி வழங்கியதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு ஆழ்வார்திருநகரி பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story