அனைவரும் போற்றும் வகையில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைய வேண்டும்; கனிமொழி எம்.பி. பேச்சு

ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழாவில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் அருங்காட்சியகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியின்போது, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:
தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வின் தொன்மையை, தமிழ்மொழியின் சிறப்பை பற்றி பேசுவதென்றால் தமிழ்மொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதற்கு தொன்மை இருக்கிறது. செம்மொழி அடையாளம் இருக்கக்கூடிய அந்த நேரத்தில் நாம் இன்று வரை தொடர்ச்சியாக பேசக்கூடிய தமிழ் மொழிக்கு மிகப்பெரிய பெருமை இருக்கிறது.
நம்முடைய பெருமையை, நமது மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் வாழ்வியல் எப்படி இருந்தது, பழக்கவழக்கங்கள் எப்படி இருந்தது. வாழ்க்கையில் என்னென்ன சாதனைகள் செய்தனர் என்பதை அகழ்வாய்வு மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்.
ஆதிச்சநல்லூர் பகுதியில் நடந்து கொண்டிருக்கின்ற அகழாய்வுகள் என்பது இந்திய அளவில் நடக்கும் அகழாய்வுகளில் முக்கியமான ஒன்றாகும். அலெக்ஸாண்டர் ரியா அவர்களுக்கு பிறகு 100 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது இந்திய தொல்லியல் துறை மூலம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள தங்கத்திலான வளையம் மூலம் நமது முன்னோர்கள் தங்கத்தின் பயன்பாட்டினை அறிந்துள்ளார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது. மேட்டு பகுதியில் ஈமச்சடங்குகள் செய்து மக்களை புதைத்தது தெரியவருகிறது. அங்கு கிடைத்த பொருட்களை கண்ணாடி மீது நின்று பார்க்கக்கூடிய வகையிலே அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
சமீபத்தில் பராக்கிரமபாண்டியபுரத்தில் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்படாத அளவில் மக்கள் வாழ்ந்த ஊரை சுற்றி மிகப்பெரிய மதில் சுவர் கட்டப்பட்டு உள்ளே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற செய்திக்கான ஆதாரம் நமக்கு கிடைத்திருக்கிறது. இப்படி மிக சுவாரசியமாக இருக்கின்ற பல்வேறு விஷயங்களை அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி என்பது ஊர் கூடி இழுத்திருக்கக்கூடிய தேர் போன்றது. மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, தொல்லியல் அதிகாரிகள், எழுத்தாளர்கள், தொல்லியலாளர்கள் என்று எல்லோரும் சேர்ந்து இழுத்த தேர்தான் இந்த அருங்காட்சியகம். அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தியாவிலேயே, உலக அளவிலே எல்லோரும் போற்றக்கூடிய அருங்காட்சியமாக ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைய வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இந்திய தொல்லியல் துறை பொது இயக்குநர் (புதுடெல்லி) டாக்டர் கிஷோர் குமார் பாசா, துணை பொது இயக்குநர் டாக்டர் மஞ்சுள், இயக்குநர் டாக்டர் அருண்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu