காவல்துறை வழங்கிய காசோலை: வங்கியில் பணம் இல்லாததால் தவிக்கும் குடும்பம்

காவல்துறை வழங்கிய காசோலை: வங்கியில் பணம் இல்லாததால் தவிக்கும் குடும்பம்
X

சித்திரைப்பாண்டி குடும்பத்தினருக்கு காவல் துறையால் வழங்கப்பட்ட காசோலை.

ஸ்ரீவைகுண்டம் அருகே பாதிக்கப்பட்ட நபருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட காசோலையில் பணம் இல்லாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெருவைச் சேர்ந்தவர் சித்திரைப்பாண்டி. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் சேரகுளம் புறக்காவல் நிலையத்தில் பெண் காவலரை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்த விவகாரத்தில் உதவி ஆய்வாளருக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தாராம்.

இதனால் சித்திரபாண்டியின் மீது கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டு பொய் வழக்கு பதிவு செய்ததாக புகார் எழுந்தது. போலீசாரின் பொய் வழக்கை எதிர்த்து சித்திரைப்பாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார். மேலும் மனித உரிமை ஆணையத்திலும் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இதுதொடர்பான விசாரணையின் பேரில் அப்போது ஸ்ரீவைகுண்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த மாதவன், காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு தொகையாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் மனித உரிமை ஆணையம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையில் கடந்த மாத இறுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இழப்பீடு தொகையான ஒரு லட்சம் ரூபாய்க்கான வங்கி காசோலை வந்துள்ளதாகவும், அதை செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ள காவல்துறையினர் போனில் தொடர்பு கொண்டு சித்திரைபாண்டியிடம் பேசி உள்ளனர்.

ஆனால் தனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதால் வர இயலாது என்று சித்திரைப்பாண்டி கூறியுள்ளார். அதன்பின் கடந்த வாரம் 1 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சென்ற செய்துங்கநல்லூர் காவல்துறையினர் சித்திரைப்பாண்டியிடம் நேரில் காசோலையை கொடுத்து கையெழுத்தும் பெற்று சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த காரணத்தினால் 2 ஆம் தேதி செய்துங்கநல்லூரில் உள்ள வங்கியில் காசோலையை சித்திரைப்பாண்டி டெபாசிட் செய்துள்ளார். ஆனால் அந்த காசோலை பணம் இன்று வரை அவரது வங்கி கணக்கில் ஏறவில்லை. இதனால் சந்தேகமடைந்த சித்திரைப்பாண்டி இன்று வங்கிக்கு நேரில் சென்று கேட்டுள்ளார். அதற்கு வங்கி ஊழியர்கள் தெரிவித்த பதில் அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

காவல்துறையினர் அளித்த காசோலையின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று வங்கி ஊழியர்கள் சித்திரைப்பாண்டியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்திரை பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..