ஶ்ரீவைகுண்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 1400 வாழைகள் எரிந்து சேதம்
தீயில் சேதமடைந்த வாழை பயிர்களை அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர், கருங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின்ரோட்டின் அருகே கருங்குளத்தில் மதியம் 1.30 மணி அளவில் வாழைத் தோட்டத்தில் திடீரென தீ பிடித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் சாத்தான்குளம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை அணைத்து விட்டு வருகை தருவதாக கூறினர்.
இதற்கிடையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ அருகருகே இருந்த தோட்டத்தில் வேகமாக பரவியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் எரிந்து நாசமாகின. கடந்த 2 மாதங்களில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வாழைத் தோட்டம், பனைமரங்கள், தென்னைமரங்கள் ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து சேதமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
1400 வாழைகள் சேதம்
இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் கருங்குளம் கிராமம் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் புல.எண் 226இல் இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் இரண்டு வயல்களில் வாழைகள் தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
மேலும், சம்பவ இடத்திற்கு அரசு அலுவலர்கள் நேரில் சென்று கள ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்போது 1.5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 1400 வாழைகள் மட்டுமே சேதமடைந்துள்ளன என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu