திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் 12 பேர் தப்பியோட்டம்: சிக்கிய இருவர்

திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் 12 பேர் தப்பியோட்டம்: சிக்கிய இருவர்
X

பைல் படம்.

திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பிய நிலையில், இரண்டு பேர் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் பிடிபட்டனர்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. குற்ற வழக்குகளில் 18 வயது கீழ் உள்ள சிறுவர்கள் கைது செய்யப்பட்டால் இந்த கூர்நோக்கு இல்லத்தில் அவர்கள் அடைக்கப்படுவார்கள். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 சிறுவர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இல்லத்தில் கண்காணிப்பாளராக ஜெய்சங்கரும், வார்டனாக ராஜேந்திரனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவில் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதை வாங்கிக் கொண்ட 12 சிறுவர்கள் திடீரென்று வார்டனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் சீனிவாசன், உதவி ஆணையர் சதீஷ்குமார், மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மார்க்கெட், ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தப்பி ஓடிய சிறுவர்கள் மறைந்து உள்ளனரா? என்று போலீசார் தேடினர். தப்பி ஓடிய சிறுவர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியில் ஸ்ரீவைகுண்டம் காவல் உதவி ஆய்வாளர் பெபின் செல்வபிரிட்டோ இன்று காலை தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகப்படும்படியாக இரண்டு சிறுவர்கள் அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து திருநெல்வேலி மேலப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அங்கு வந்த மேலப்பாளையம் காவல்துறையினரிடம் இரண்டு சிறுவர்களும் ஒப்படைக்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் பிடிப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவன் மீது கொலை வழக்கும் மற்றொருவன் மீது திருட்டு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!