சாதிய மோதல்களை தடுக்க தனி உளவுப் பிரிவு வேண்டும்.. தொல் திருமாவளவன் பேட்டி ...

சாதிய மோதல்களை தடுக்க தனி உளவுப் பிரிவு வேண்டும்.. தொல் திருமாவளவன் பேட்டி ...
X

தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் சாதிய மோதல்களை தடுக்க தனி உளவுப் பிரிவு அமைக்க வேண்டும் என தொல் திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பிரச்னை கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்னையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று முதல்வர் சட்டமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது . இதுபோன்று குற்றங்களை தடுக்க, சாதி மதத்தின் பெயரால் வன்முறைகள் நடப்பதை தடுப்பதற்கு தனி உளவு பிரிவு அமைக்க வேண்டும்.

இரட்டை குவளை முறை தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது. அதனை தடுப்பதற்கு சிறப்பு விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும். ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், அண்மையில் தான் ஒரு அமைச்சர் அது ராமர் பாலம் இல்லை என்று பேசினார்.

மீண்டும் அவர்கள் அது ராமர் பாலம் என்று சொல்லுவது அதிர்ச்சியாக உள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அந்தத் திட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வாழ்த்துகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கருதுகிறவர்கள் மீண்டும் ராமர் பாலம் பிரச்சினையை கையில் எடுக்கின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஏற்கெனவே காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி. காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. மீண்டும் அங்கு காங்கிரஸ் போட்டியிட திமுக இடம் அளித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறும். அதற்கு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தீவிரமாக பணியாற்றுவோம்.

அதிமுக இன்று சின்னத்தை இழந்து நிற்கிறது. ஒரே அதிமுகவாக இல்லை. ஆகவே அவர்கள் அதில் இருந்து பின்வாங்கி இருப்பதாக தெரிகிறது. யார் நின்றாலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்.

தமிழகம் முழுவதும் தாட்கோ மூலம் கடன் வழங்குவதில் பிரச்னை இருக்கிறது. மானியம் கொடுக்க அரசு முன்வந்தாலும் கடன் கொடுக்க வங்கிகள் முன் வருவதில்லை. வங்கியும் ஒத்துழைத்தால் தான் ஆதிதிராவிட மக்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும். தேசிய வங்கிகள் பெரும்பாலும் இதற்கு ஒத்துழைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

ஈஷா யோகா மையத்தில் பெண்ணின் இறப்பிற்கு யார் காரணம்? என்ன நடந்தது? என்ன பின்னணி? என்பதை மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தனி விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

சேது கால்வாய் திட்டத்தால் தங்களுக்கு என்ன பாதிப்பு என்பதை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் கூட இந்துமாகடலில் நிலவும் சர்வதேச அரசியலை கருத்தில் கொண்டு சேது கால்வாய் திட்டத்தில் தேவையை அறிந்து தமிழ்நாடு அரசு அதை வலியுறுத்துகிறது.

மக்கள் குறைகளையும் கவனிக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை கேட்டு, அவர்களின் விருப்பத்தை அறிந்து அதன் அடிப்படையில் இது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். மீனவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அறிக்கையை அளித்து சில மாதங்கள் ஆகி உள்ளது. அந்த அறிக்கையின் மீதான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக நான் நம்புகிறேன். அந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!