தூத்துக்குடி பெருமாள் கோயிலில் கல் தூண் நிறுவும் பணி துவக்கம்
தூத்துக்குடி பெருமாள் கோயில் கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற பழமையான வைகுண்டபதி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்தத் திருக்கோயிலில் 2000 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருந்தன.
இந்நிலையில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த கோயிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில்; பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.
தற்போது பெருமாள் கோயிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை அவர் துவக்கி வைத்தார். பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகிய கோயில் கட்டுமானப் பணியையும் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வைகுண்டபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் அடுத்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. அதனையொட்டி கல்மண்டபத்திற்கான கல் தூண் அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளோம். இந்த கட்டுமான பணிகள் வேகமாக நடைபெறும்.
பல தொழிலதிபர்கள் பங்களிப்புடன் கட்டுமான பணிகள் நடைபெறும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பல கோடி மதிப்புள்ள திருக்கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 1400-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, கோயில் செயல் அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, தெப்பகுளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu