தூத்துக்குடியில் மண்ணில் புதைந்த தொழிலாளர்களை உயிருடன் மீட்ட போலீசார்
தூத்துக்குடியில் குழி தோண்டியபோது மண்ணில் புதைந்த நான்கு வெளிமாநிலத் தொழிலாளர்களை போலீசார் உயிருடன் மீட்டனர்.
இயற்கை எரிவாயு கொண்டுச் செல்வதற்காக ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு குழிகளை தோண்டியும், குழாய்களை பதித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் எதிரே ஐஓசிஎல் (IOCL) குழாய் பதிக்கும் பணியில் உத்திரபிரதேசம் பாட்வாலியா ரோடி பகுதியை சேர்ந்த அசோக் சர்மா மகன் ஓம் பிரசாத் (26), பீகார் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர்களான ஹரிராம் நாத் ஷா மகன் ஹரிராம் பிரசாத் (38), கட்டிவன் ஷா மகன் பிரசாத் (29) மற்றும் பீகாரை சேர்ந்த வக்கீல்கிரி மகன் ரிக்தேஷ் (25) ஆகியோர் வேலை செய்து கொண்டிருத்தனர்.
அப்போது, திடீரென மழையின் காரணமாக மண் சரிந்து குழியில் விழுந்துள்ளது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான்கு பேரும் குழிக்குள் சிக்கி புதையுண்டனர். அப்போது அந்த வழியாக சென்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சுடலைமணி, சண்முகையா, கதிரவன், டேவிட் ராஜன் மற்றும் சக்தி மாரிமுத்து ஆகியோர் அடங்கிய மாவட்ட எஸ்.பி தனிப்படை போலீசார் உடனடியாக அந்த குழிக்குள் இறங்கி சரிந்த மண்னை தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் மண் அகற்றப்பட்டு குழியில் சிக்கி இருந்த நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். குழிக்குள் மாட்டிக்கொண்ட நான்கு பேரையும் மனிதநேயத்துடன் காப்பாற்றி உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாரை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டினர். நான்கு உயிர்களை காப்பாற்றிய தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu