தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயற்சி.. பாஜகவினர் 140 பேர் கைது…

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சருமான கீதாஜீவன் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தூத்துக்குடியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா பேசும்போது அமைச்சர் கீதாஜீவனை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8 ஆவது தெருவில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள், சேர்கள், பூந்தொட்டிகள் மற்றும் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் சசிகலா புஷ்பா வீட்டின் முன்பு திரண்டனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
மேலும், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இன்று (23-12-22) காலை மணிக்குள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யாவிட்டால் அமைச்சர் கீதாஜீவனின் வீட்டை முற்றுயிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.
இதற்கிடையே, தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறாக பேசிய சசிகலா புஷ்பா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் படி, தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும், சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக 21 பேர்கள் மீது சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில தலைவர் அண்ணாமைலை குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் கீதாஜீவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில், தூத்துக்குடி தனசேகரன் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
பினனர் அவர்கள் தனசேகரன் நகரில் இருந்து போல் பேட்டையில் உள்ள அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். புதிய பஸ்நிலையம் அருகே சென்றபோது அவர்களை துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையில் போலீசார், அனுமதி இல்லாமல் ஊர்வலமாக செல்லக்கூடாது எனவும், திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இருப்பினும், பாஜகவினர் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீஸார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் கண்ணீர் புகைக்குண்டு வீச நேரிடம் என போலீஸார் பாஜகவினரிடம் தெரிவித்தனர். அதையும் மீறி முற்றுகையிட சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட 140 பேரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, சசிகலா புஷ்பா வீட்டின் தாக்குதல் நடத்தியதாக தூத்துக்குடி மாநகராட்சி 45 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணனை சிப்காட் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட முதலாவது நீதித்துறை நடுவர் ஜலதி கவுன்சிலர் ராமகிருஷ்ணனை ஜாமீனில் விடுவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu