கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ. குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கல்

கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மனைவி போனிஸ்தாளிடம் காசோலையை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த 25 ஆம் தேதி தனது அலுவலகத்தில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விாசரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 கோடி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி போனிஸ்தாளிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு நேர்மையான அதிகாரியை இழந்திருக்கிறோம். அவரை இழந்து அன்னாரது குடும்பம் வாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் அறிவித்த அன்னாரது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 கோடிக்கான காசோலை இன்று வழங்கப்பட்டு உள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சரியான விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
மேலும், அந்தப் பகுதியில் மணல் கொள்ளையை தடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு நடக்காமல் இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கௌரவ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu