கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ. உடல் அடக்கம்: மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் தாமரபரணி ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ராமசுப்பு என்பவர் மீது கடந்த 13 ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பாடு கோவில்பத்து கிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த போது மணல் கொள்ளையர்கள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் அலுவலகத்தில் வைத்து அவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தூத்துக்குடி அருகே உள்ள அவரை சொந்த கிராமமான சூசை பாண்டியாபுரத்துக்கு கொண்டுவரப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள ராயப்பர் ஆலயத்தில் அடக்க திருப்பலி நடைபெற்றது.
அதன் பின்பு ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் லூர்து பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலியில் பங்கேற்ற தமிழ்நாடு கிராம அலுவலர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் அழகிரிசாமி கூறியதாவது:
காவல்துறையின் அலட்சியம் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது இதற்கு காரணமான முறப்பநாடு காவல்துறை உதவி ஆய்வாளர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் துறை ஊழியர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது இதற்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழகிரிசாமி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu