தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி மற்றும் கீழத்தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதிபாஸ்நகரில் உள்ள 298 குடியிருப்புகளில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. 26.20 இலட்சம் மதிப்பீட்டில் 233 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்;டு, மீதமுள்ள 65 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.98 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக்கட்டிடப் பணிகளையும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 3.70 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 56 குடியிருப்புகளையும், கூடுதலாக ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 4 குடியிருப்பு கட்டுமானப் பணிகளையும் ஆட்சியர் லட்சுமிபதி நேரில் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அருகில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 528 குடியிருப்புகள் கட்டும் பணிகளையும், கோமஸ்புரத்தில் ரூ. 1.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மின்தகன மேடை கட்டுமானப் பணிகளையும், தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 12.61 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், கீழ தட்டப்பாறை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 27.15 லட்சம் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தினையும், குழந்தைகள் நேய உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 27.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தினையும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபத்திரன், செயற்பொறியாளர் (வளர்ச்சி) பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, உதவி செயற்பொறியாளர் ஜாக்லின் அமலா, உதவிப் பொறியாளர்கள் ரவி, பிரான்சிஸ்கா, அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu