தூத்துக்குடியில் படைவீரர் கொடி நாள் வசூலை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடியில் கொடிநாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீர மரணம் அடைந்தவர், உடல் ஊனமுற்றவர்கள் அனைவரது தியாகத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் மத்திய மாநில அரசால் கொடி நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா 1949 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொடி நாள் வசூலை ஆட்சியர் லட்சுமிபதி தொடங்கி வைத்தார். மேலும், படைவீரர் கொடிநாள் 2023 ஆம் ஆண்டிற்கான தேநீர் விருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசியதாவது:-
முன்னாள் படைவீரர் அனைவரது தியாகத்தை போற்றக்கூடிய வகையில் படைவீரர் கொடிநாள் விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக நாம் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதையும் நினைவுகூற வேண்டிய தருணம் ஆகும்.
கொடி நாளை நாம் அனுசரிக்கும் அதே நேரத்தில் என்னென்ன திட்டங்கள் நம் முன்னாள் படைவீரர்களுக்கு அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
கொடி நாள் வசூல் என்பது முன்னாள் படைவீரர்களின் தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது. அதற்கு அனைத்து துறை அலுவலர்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இது போன்று கொடி நாள் நிதி உதவி தொடர்ந்து நாம் செயல்படுத்துவோம்.
படைவீரர் கொடிநாள் 2022 ஆம் ஆண்டு மாவட்ட வசூல் தொகையான ஒருகோடியே 21 லட்சத்து 66 ஆயிரத்து 800-ம் தூத்துக்குடி மாநகராட்சியின் வசூல் தொகை 5 கோடியே 10 லட்சத்து 60 ஆயிரம் என வசூல் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த ஆண்டும் (படைவீரர் கொடிநாள் 2023) அரசு நிர்ணயிக்கப்படும் தொகைக்கான இலக்கை முழுவதுமாக எய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி பேசினார்.
விழாவின்போது, படைவீரர் கொடிநாள் 2021 ஆம் ஆண்டில் கொடிநாள் நிதிக்கு அதிக வசூல் புரிந்த 8 மாவட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் 56 முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக 19 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், முன்னாள் படை வீரர் நலன் அலுவலக உதவி இயக்குநர் தெய்வசிகாமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu