குஜராத்தை கடைபிடியுங்கள்.. உப்பு உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் அதிரடி கோரிக்கை…
கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் கீதாஜீவனிடம் உப்பு உற்பத்தியாளர்கள் வழங்கினர்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், தூத்துக்குடியில் தேசிய அளவிலான உப்பு மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐஐ முன்னாள் தலைவர் மற்றும் உப்பு மாநாட்டு தலைவர் மைக்கேல் மோத்தா தலைமை தாங்கினார். தூத்துக்குடி சிஐஐ தலைவர் தாமஸ் ஆண்டனி வரவேற்புரை ஆற்றினார். உப்பு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
குஜராத்தை கடைபிடியுங்கள்:
தேசிய உப்பு மாநாட்டை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
நாட்டின் உப்பு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உள்ள குஜராத் மாநிலத்தின் உப்பு உற்பத்தி அளவோடு ஒப்பிடுகையில் நமது மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் அளவு மிகக்குறைவாகவே உள்ளது. எனவே அந்த மாநிலத்தோடு போட்டிபோடும் அளவுக்கு அதிகளவில் உப்பு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்.
வரும் 2030 ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் உற்பத்தி இலக்கை அடைய வேண்டும் என்பது தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமாக உள்ளது. அந்த இடத்தை அடைய உப்பு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.
உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள குஜராத் மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் தொழில்நுட்பங்களை கற்று தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உப்பு உற்பத்தியை அதிகரிக்க தேவையான கருத்துகளை மாநாட்டின் மூலம் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
பகுதிநேர இயந்திரபணிகள்:
நிகழ்ச்சியில் தமிழ்நாடு உற்பத்தி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜாமணி பேசும்போது:
தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்குவதற்கு பகுதி இயந்திர உப்பு உற்பத்தி பணிகள் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்த உள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இடங்களில் உப்பு உற்பத்தி பணிகளை தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 1.25 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யபடும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள நெய்தல் உப்பு உற்பத்தி குறைந்த விலையில் நியாய விலை கடைகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என ராஜாமணி தெரிவித்தார்.
மாநாட்டில், மத்திய அரசின் முன்னாள் உப்பு ஆணையர் முகமது அனஸ் அன்சாரி, இந்திய உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரத் ஸ்ரீ ரவால், மத்திய அரசின் உப்பு இணை ஆணையர் ரகு சக்கரபாணி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாநாட்டை முன்னிட்டு, உப்பு உற்பத்தியாளர்களின் தொழில் மேம்பாட்டு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டின்போது உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சர் கீதாஜீவனிடம் அளிக்கப்பட்டது.
உப்பு உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடம்:
இந்தியாவில் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி பணிகள் நடைபெறுகிறது. உப்பு உற்பத்தியில் 11799 உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 87.6 சதவீதம் சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் ஒட்டுமொத்த உப்பு உற்பத்தியில் 79 சதவீத உப்பு உற்பத்தியுடன் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 10 சதவீத உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ராஜஸ்தானில் 9 சதவீதம் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
மேலும், ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, மேற்கு வங்காளம், கோவா, ஹிமாச்சல் போன்ற மாநிலங்களில் இரண்டு சதவீதம் உப்பு உற்பத்தி பணியானது நடைபெறுகிறது. இந்தியாவில் உப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடம் வகித்து வரும் தமிழகத்தில் 25 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது, இருப்பினும், கமிழகத்தில் 50 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்ய போதுமான இடங்கள் இருப்பதால், அதிக உப்பு உற்பத்தி செய்வதுடன் கூடுதல் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்த முடியும் என்பதால் உப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மாநில அரசு மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu