மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும்.. மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்புக் கழகம் வலியுறுத்தல்..
தமிழ்வானம் சுரேஷ்.
உலகம் முழுவதும் கடல் மற்றும் கடல் வளத்தை நம்பி வாழும் மீனவ மக்களின் நாளாக உலக மீனவர் தினம் நவம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 45 நாடுகளைச் சேர்ந்த 150 மீனவத் தலைவர்கள் டெல்லியில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஒன்றாக கூடி மீனவர் நலன் சார்ந்த சாசனத்தை வெளியிட்டனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 21 ஆம் தேதி உலக மீனவர் தின நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு உலக மீனவர் தின விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, மீனவர்களின் கோரிக்கைகள் குறித்த விவரங்களை மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு கழகத்தின் நிறுவனத் தலைவர் தமிழ்வானம் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தில் கடலோர மக்களின் வாழ்விடங்களும், உள் கட்டமைப்புகளும் முறையாக பதிவிடாமல் உள்ளது. கடற்கரை குடியிருப்புகளை அடையாளப் படுத்தாமலும், பல கிராமங்களை வரைபடத்திற்குள் கொண்டு வராமலும் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.
கடலோர மக்களின் அனைத்து குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள், விளையாட்டுத் தலங்கள், மருத்துவ கட்டமைப்புகள், சாலைகள், பாலங்கள், குடிநீர், மின்சாரக் கட்டமைப்புகள், மீனவர் ஓய்வறைகள், வலைபின்னும் கூடங்கள்,இயங்குதளம்,கடலரிப்புத் தடுப்புக் கட்டமைப்புகள் அனைத்தையும் வரைவு அறிக்கையில் கொண்டு வந்து அதைத் தமிழில் அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும்.
தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய சமூகமாக மீனவ சமுதாய மக்கள் உள்ளனர். ஆனால், மாவட்டத்தில் இருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றிபெற முடியாத நிலையில் தொகுதி பிரிக்கப்பட்டுள்ளது. அதை மாற்றி கடலை எல்லையாக வைத்து கிழக்கு மேற்காக சட்டமன்ற தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்கவும் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து மீனவர்களைக் காக்கவும் தமிழ்நாடு அரசு அதிநவீன படகு, ஹெலிகாப்டர், சிறிய ரக விமானம், கடற்படை கப்பல், கடலோர காவல் படை கப்பல், தனியார் கப்பல்களோடு தொடர்பை ஏற்படுத்தி ஒரு கடல் ஆம்பலன்ஸ் சிஸ்டத்தை ஏற்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்திய அருமணல் ஆலைக்கு தாது மணல் அள்ள வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்ய வேண்டும். மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்வானம் சுரேஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu