முதல்வரின் வெளிநாட்டு பயணம் கண்துடைப்பு; பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டும். நாள்தோறும் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்க்கிறது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு ஐடி ரெய்டு வரும்போது தகவல் சொல்லவில்லை என்று காவல்துறை சொல்கிறார்கள். ரெய்டு என்றால் யாருக்கும் சொல்லாமல் வருவது தான். இதிலிருந்து காவல் துறை கைப்பாவையாக மாறிவிட்டது என்பது தெரிகிறது.
கேட் திறக்கவில்லை என்றால், அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து சோதனை செய்வது தான் வழக்கம். வருமான வரி துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு, நியாயத்தை பேசுபவர்களுக்கு, கனிமவள கொள்ளையை தடுப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திராவிட மாடல் எனக் கூறிக் கொண்டு நேரத்திற்கு ஒரு ஆடை அணிந்து கொண்டு, முதல்வர் தான் மாடலாக மாறி வருகிறார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உலக பிரசித்தி பெற்றது. அதன் அங்கீகராம் ரத்து செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய தலைக்குணிவு.
தமிழகத்தில் முறையாக பள்ளி கட்டிடம் கட்டப்படுவதில்லை. மருத்துவக் கல்லூரிகளுக்கு முறையாக கட்டிடம் கட்டப்படுவதில்லை. ஆனால் ஆங்காங்கே 500 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கள்ளச்சாராயம் எலைட் பார் தானியங்கி மூலம் மது விற்பனை தமிழகமே மதுவுக்கு அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம், தமிழக அரசு மற்றும் ஆட்சி குறித்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து தரப்பினரையும் போதையில் வைத்துள்ளது தமிழகத்தில் இன்று பெண்கள் குடிக்க ஆரம்பித்து விட்டனர். கஞ்சா பழக்கம் அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் எதிர்காலம் அனைவரும் போதைக்கு அடிமையாவதுதான்.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் எல்லாம் கண் துடைப்பு நாடகம். திராவிட மாடல் என்று கூறி தமிழக முதல்வர் நிமிஷத்துக்கு ஒரு டிரெஸ்ஸை மாட்டிக்கொண்டு மாடலாக மாறி உள்ளார். எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அவர்கள் கண்டிப்பாக பங்கேற்றிருக்க வேண்டும். அவரை ஏன் அழைக்கவில்லை என்று பாஜக பதில் சொல்ல வேண்டும். இந்த நல்ல நிகழ்வை நாம் அனைவரும் இந்திய மக்களாக வரவேற்போம். திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை என்றால் 2 ஆண்டுகள் இருன்ட ஆட்சி என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu