திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்: டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (நவம்பர் 18) மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நான்கு அரசு மதுபானக்கடைகளை மூட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு 18.11.2023 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை மற்றும் பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-இன் படி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள நான்கு மதுபானக் கடைகள் மட்டும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அதாவது, வீரபாண்டியன்பட்டணம் அடைக்கலாபுரம் பகுதி, பரமன்குறிச்சி சாலை சங்கிவிளை, திருச்செந்தூர் பாளையங்கோட்டை சாலை, திருச்செந்தூரில் உள்ள குலசேகரன்பட்டினம் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நான்கு மதுபானக் கடைகளும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றையதினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளதால் அந்தப் பகுதிகளில் அன்றைய தினம் மதுபான விற்பனை எதுவும் நடைபெறக் கூடாது. அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu