தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியைகள் நடத்திய திடீர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் மாவட்டம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட ஆசிரியைகளிடம் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு அரசு பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் வழங்கி உள்ளார். இதற்கான சம்பளம் அந்த தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவன இயக்குநர் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தொண்டு நிறுவன இயக்குநரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் திடீரென தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவித்ததுடன், பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட தொண்டு நிறுவன இயக்குநரை கைது செய்யக் கோரி மனு அளித்தனர்.
தங்களிடம் மோசடியாக பெறப்பட்ட பணத்தை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களிடம் மோசடியில் ஈடுபட்டதுடன் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடும் தொண்டு நிறுவன இயக்குநரை கைது செய்ய கோரியும் தங்களிடம் மோசடியாக பெறப்பட்ட பணத்தை மீட்டு தரகோரியும் பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu