தூத்துக்குடி மாரத்தான் ஓட்டப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தூத்துக்குடியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவ மாணவிகள்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 43 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவின் துவக்கமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 5 மைல் மாரத்தான் ஓட்டப்பந்தயம் “பசுமை தூத்துக்குடி” என்ற தலைப்பில் நடைபெற்றது.
இந்த மாரத்தான் ஓட்டத்தை தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி கேம்ஸ் வில் நிறுவன தலைவர் ரைபின் தாரிசியஸ், கல்லூரி முதல்வர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் நோவா ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த் அஜித் குமார் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், ஸ்ரீவைகுண்டம் கேஜிஎஸ் கல்லூரியை சேர்ந்த சக்திவேல் இரண்டாவது இடத்தையும், கடையநல்லூர் ஜெய் சிவன் கலைக்கூடத்தை சேர்ந்த கண்ணன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ராதிகா முதல் இடத்தையும், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கனகலட்சுமி இரண்டாவது இடத்தையும், விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ரம்யா மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கு பெற்ற 197 ஆண்கள் மற்றும் 74 பெண்களுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர் சங்க பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500 முன்னாள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராஜேஷ் தில்லை தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் விக்னேஷ் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார்.
முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவலரும் கல்லூரியின் முதல்வருமான பூங்கொடி சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் வேதியியல் துறையின் முன்னாள் மாணவரும் சென்னை காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளருமான பிரபாகர் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி காமராஜ் கல்லூரியின் முன்னாள் கணிதத்துறை மாணவர் எழிலரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆங்கிலத்துறைத் தலைவர் சாந்தி, பொருளாதாரத் துறைத் தலைவர் பிரபாவதி, கணிதத்துறை இணைப் பேராசிரியர் ராமலெட்சுமி, வணிகவியல் துறைத் தலைவர் முரளிதரன், இயற்பியல் துறைத்தலைவர் சிவதாஸ் மற்றும் சிறப்பு நிலை பதிவறை எழுத்தர் முருகேசன் ஆகியோர் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரியின் முன்னாள் மாணவர் ஜான்சன் தேவராஜ் காமராஜர் குறித்து கவிதை படித்தார். முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் கலையரசி நன்றியுரை ஆற்றினார். கல்லூரியின் முன்னாள் கணிப்பொறி அறிவியியல்துறை மாணவர் கல்லூரியின் கண்காணிப்பாளர் சரவணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற துறைவாரியான கூட்டத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஆசிரியரல்லாப் பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu