தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான பயணம்.. மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்...
தூத்துக்குடி தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர்.
தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் அரசு உதவி பெறும் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை ரமா தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கோயிலுக்கு செல்வதற்கும், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கும் விடுமுறை எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
எனவே, இனிமேல் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக அவர் மாணவ, மாணவிகளிடம் வாக்குறுதி அளித்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்து மாணவர்கள் விடுமுறை எடுப்பது குறைந்தது.
இதைத்தொடர்ந்து, விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவிகளை சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்து பள்ளி செயலாளர் சண்முகத்திடம் ஆலோசித்தார். அவர் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்ததுடன் பயணச்செலவில் பள்ளி நிர்வாகமும் பங்களிப்பதாக கூறினார். மேலும் ஒரு நன்கொடையாளர் உதவி அளிக்க முன்வந்தார்.
அதந்படி, 12 மாணவ, மாணவிகளை முற்றிலும் இலவசமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்வது என பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை சென்னைக்கு சென்ற விமானத்தில் மாணவ, மாணவிகள் பயணித்தனர்.
சென்னையில் வண்டலூர் உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரீனா கடற்கரை, தமிழ்நாடு முதல்வர் அவர்களின் நலத்திட்ட புகைப்படக் கண்காட்சியையும் ஆகியவற்றை அவர்கள் கண்டு களித்தனர். பின்னர் முத்துநகர் விரைவு ரயிலில் தூத்துக்குடி திரும்பினர்.
மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் பெருமகிழ்ச்சி அடைந்து ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர். சுற்றுலாவில் மாணவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியைகள் ரமா, சரஸ்வதி மற்றும் அந்தோணி ஆஸ்மின் ஆகியோர் சென்றிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu