தூத்துக்குடியில் தி.மு.க.வில் இணைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

தூத்துக்குடியில் தி.மு.க.வில் இணைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
X

திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் முன்னிலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் தங்களை திமுக இளைஞரணியில் இணைத்து கொண்டனர்.

திமுகவுக்கு ஆதரவளிக்கும் வகையில், தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வின் காரணமாக ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

மேலும், திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி தமிழக முழுவதும் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் முன்னிலையில் இன்று தங்களை திமுக இளைஞரணியில் இணைத்துக் கொண்டனர்.

திமுகவில் இணைத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், அடையாள அட்டை வழங்கியும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்கள் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு ஆன்லைன் மூலம் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில திமுக இளைஞரணி நிர்வாகிகள் இன்பாரகு, சீனிவாசன், அப்துல் மாலிக், இளையராஜா, ஜிபி ராஜா, பிரபு, ஆனந்த குமார், பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா