தூத்துக்குடியில் சாரண இயக்கத்தினருக்கு மாநில அளவிலான பயிற்சி முகாம்
தூத்துக்குடியில் நடைபெற்ற பாரத சாரண இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி ஹென்றி தொடங்கி வைத்தார்.
பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில், குருளையர் மற்றும் நீலப்பறவையினர்களுக்கான பயிற்சி முகாம் (உத்சவ்) மாநில அளவில் முதல்முறையாக தூத்துக்குடி மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்கச் செயலாளர் எட்வர்ட் ஜான்சன்பால் வரவேற்று பேசினார். மாநில உதவி ஆணையர் சாரணியர் பிரிவு மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையர் ஜெயா சண்முகம் தலைமையில் மாவட்ட முதன்மை ஆணையரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான ரெஜினி ஹென்றி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், பாரத சாரண, சாரணிய உத்சவ் கொடியை மலரவிட்டு சாரண, சாரணியர்கள், குருளையர்கள், நீலப்பறவையினர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். அதன்பின் தேசியக் கொடி வண்ணங்களில் பலூன்களை பறக்கவிட்டு உத்சவ் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
மாநில அமைப்பு ஆணையர் கோமதி கண்ணன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு நினைவுபரிசு வழங்கி கௌரவித்தார். மாநில அமைப்பு ஆணையர் சக்திவேல், மாநில பயிற்சி ஆணையர் நாகராஜன், தேசிய பயிற்சியாளர்கள் பூர்ணசந்திரன், வேணுகோபால், சரஸ்வதி, பிரியங்கா, உமாமகேஸ்வரி, மணிமேகலை ஆகியோர் உத்சவ் சிறப்பாக நடைபெற வாழ்த்தி பேசினர். தொடக்க விழாவின் நிறைவில் மாவட்ட ஆணையர் சரவணன் நன்றி கூறினார்.
விழாவில் குருளையர், நீலப்பறவையினருக்கான வரவேற்பு நிகழ்ச்சி. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம், பாடல்கள், கிராமிய நடனங்கள், குழுநடனம், கைவினைப் பொருட்கள் செய்தல், கடற்கரையோர தூய்மைப்பணி, முகத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தும் படம் வரைதல், காகிதத்தில் உருவங்கள் செய்தல், பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கம், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட குருளையர், நீலப்பறவையினர்கள், சாரண, சாரணியப் பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நினைவுப்பரிசு வழங்கினார்.
மாநில அளவிலான இந்த பயிற்சி முகாமில் 14 மாவட்டங்களில் இருந்து பொறுப்பாசிரியர்கள் சாரண, சாரணியர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் எட்வர்ட் ஜான்சன்பால், மாவட்ட ஆணையர் சரவணன், மாவட்டப் பயிற்சி ஆணையர் சாரணியர் ஜெயா சண்முகம், மாவட்டப் பயிற்சி ஆணையர் சாரணர் கார்த்திக், இணைச் செயலாளர் சகாயமேரி வீனஸ் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக திருச்செந்தூர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu