மழை வேண்டி தாமிரபரணி ஆற்றில் சீனிவாச சித்தர் 7 மணி நேரம் ஜல தவ வழிபாடு
தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் தாமிரபரணி நதியில் ஜல தவ சிறப்பு வழிபாடு செய்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் தமிழகத்திலேயே மிக உயரமாக 11 அடி உயரத்தில் மஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர் எழுந்தருளியுள்ள ஸ்ரீசித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, தேய்பிறை அஷ்டமி, பௌர்ணமி நாட்களில் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு, தென்கிழக்கு பருவமழை சரிவர பெய்யாமல் பொய்த்துப்போனதால் தென்மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயம் மற்றும் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு அனைத்துதரப்பு மக்களும் பெரிதும் பரிதவித்து வருகின்றனர். மேலும், கோடை காலத்தை மிஞ்சிடும் வகையில் வெயிலின் தாக்கமும் மிக உக்கிரமாக இருந்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் நன்கு மழை பெய்து வறட்சி நீங்கி பசுமை வளம் கொழித்திடவும், குடிநீர் தட்டுப்பாடு முற்றிலுமாக நீங்கிடவும், கடுமையான வெயிலின் தாக்கம் இன்றி மக்கள் மகிழ்வாகவும் மனநிறைவாகவும் வாழ்ந்திட வேண்டி பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீசித்தர் பீடத்தின் நிர்வாகி சீனிவாச சித்தர் தாமிரபரணி நதியில் சிறப்பு வருண ஜெப வழிபாடு செய்தார்.
புண்ணயமிகு ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் ஆன்மிக சிறப்புபெற்ற முறப்பாடு பகுதியில் ஆற்றின் உட்பகுதியில் கழுத்தளவு தண்ணீருக்குள் சீனிவாச சித்தர் அமர்ந்து 7மணிநேரம் ஜல தவத்துடன் கூடிய சிறப்பு வழிபாடு செய்தார். வருண ஜெப வழிபாட்டை தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு மஞ்சள், பால் அபிஷேகம் செய்தும், வண்ணமிகு மலர்களை தூவியும் வழிபட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரருக்கு வருண ஜெப சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகளும், தீபாரதனையும் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற வருண ஜெப சிறப்பு யாகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டு மகிழ்ந்தனர். முடிவில், பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu