தூத்துக்குடியில் கெட்டுப் போன கேக் பறிமுதல்: கடையின் உரிமம் ரத்து
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உள்ள பேக்கரியில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன கேக்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முள்ளக்காடு பகுதியில் உள்ள ஆதிரா பேக்கரி என்ற பேக்கரி கடையில் வாங்கிய கேக்குகள் கெட்டுப் போயிருந்ததாக பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் பேக்கரி ஊழியர்களிடம் புகார் அளித்தார்.
அவர்கள் சரியான விளக்கம் அளிக்காததால் இதுதொடர்பாக பேக்கரி ஊழியர்களிடம் இசக்கிராஜா மற்றும் அவரது நண்பர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும், கெட்டுப்போன கேக் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு அவர்கள் தொலைபேசி மூலம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், பேக்கரியில் கெட்டுப் போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தகவல் வெளியானது. இதையெடுத்து, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டார்.
விசாரணை குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பேக்கரியில் ஞாயிறு அன்று தயாரிக்கப்பட்ட கேக்குகள் உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படாமல், நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டதும், அந்த கேக்குகளில் பூஞ்சைத் தொற்று இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது.
மேலும், நடந்த தவறுகளுக்கு உரிமையாளர் பொறுப்பேற்று வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அந்த வளாகத்தில் சில பொது சுகாதாரக் குறைபாடுகளும் காணப்பட்டன. எனவே, தொடர் விசாரணைக்காகவும், பொது சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஏதுவாகவும், அந்த பேக்கரியின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்யப்படுவதாக, உரிமையாளரிடம் தெரிவித்து, வணிகத்தினை உடனே நிறுத்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவு நாளை நியமன அலுவலர் அலுவலகத்தில் பேக்கரி உரிமையாளருக்கு சார்வு செய்யப்படும். மேலும், தப்புக்குறியீடான 5 லிட்டர் நெய்யும், உரிய வெப்பநிலையில் இல்லாத 9 கிலோ கேக்குகளும், 2.5 லிட்டர் மில்க் ஷேக்குகளும் பேக்கரியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, நெய் தவிர மற்றவை அளிக்கப்பட்டது. நெய்யை உணவு பகுப்பாய்வு செய்வதற்காக, பகுப்பாய்வுக் கூடத்திற்கு விரைவில் அனுப்பப்படும் என உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu