தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்..!

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்..!
X

தூத்துக்குடியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 450 பேர் விண்ணப்பம் அளித்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

முகாமில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:

மறைந்த முதல்வர் கருணாநிதியின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம்களை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஒவ்வொரு துறை மூலமும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்கும் முகாம், மருத்துவத்துறை மூலம் மருத்துவ முகாம், வேளாண் துறை மூலம் முகாம்கள் ஆகியவை நடத்தப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்களை பெறுவதற்கு அடையாள அட்டை மற்றும் தேசிய தனித்துவ அடையாள அட்டை தேவைப்படும். அடையாள அட்டைகள், சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள் என அனைத்தும் ஒரே இடத்தில் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக மருத்துவத்துறையினர், வருவாய்த்துறையினர், ஆதார் அட்டை எடுப்பவர்கள் வந்துள்ளார்கள். நீங்கள் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தால் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. இதனால் நீங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் உதவித்தொகை தடையின்றி பெற முடியும். ஆதார் எண் இணைக்கும் முகாம்கள் மாவட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. இதில் விடுபட்டவர்கள் இன்றைய முகாமில் இணைத்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு தேவையான அரசின் திட்டங்களை பெற்றுத்தருவதற்கு மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த முகாமினை அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார். தெரிவித்தார். முகாமின்போது, கூடுதல் பராமரிப்பு தொகை கேட்டு 70 பேரும், புதிய அடையாள அட்டை கேட்டு 30 பேரும், உதவி உபகரணங்கள் கேட்டு 60 பேரும், தனித்துவ அடையாள அட்டை வேண்டி 56 பேரும், இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி 11 பேரும், மருத்துவக் காப்பீடு வேண்டி 45 பேரும், ஆதார் அட்டை வேண்டி 10 பேரும், நலவாரிய பலன்கள் வேண்டி 31 பேரும் என மொத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி 450 பேர் மனு அளித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்