ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு துவங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு
தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன் பெறலாம்.
தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி e-KYC(விரல்ரேகை மூலம்) மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும்.
இந்த கணக்கிற்கு இருப்புத் தொகை எதுவும் கிடையாது. கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத் தொகையை அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், DOOR STEP BANKING என்ற சிறப்பு சேவை மூலமும் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கி ஆகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அணுகுவதற்கு எளிமையான குறைந்த கட்டணங்களுடன் நகரங்களில் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு எளிய வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் மட்டுமில்லாமல் நூறு நாள் வேலைத் திட்டபயனாளிகள், பிரதம மந்திரி கிசான் திட்டப் பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன் பெறலாம்.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், ஓட்டப்பிடாரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியிலுள்ள பயனாளிகள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்கி பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu