தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பல கோடி மதிப்பிலான உதிரி பாகங்கள் திருட்டு: 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பல கோடி மதிப்பிலான உதிரி பாகங்கள் திருட்டு: 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்
X

தூத்துக்குடி அனல் மின் நிலைய முகப்பு படம்.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் இருந்து 690 கிலோ குப்ரோ நிக்கல் குழாய்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனல் மின்நிலைய ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி துறைமுக சாலையில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்கள் உள்ளன. ஒவ்வொரு யூனிட் மூலமும் 210 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கான நிலக்கரி துறைமுகத்தில் இருந்து கன்வேயர் மூலம் நேரடியாக அனல் மின்நிலைய கொதிகலனுக்கு கொண்டு வரும் வகையில் வசதிகள் உள்ளன.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனல் மின் நிலையத்தில் 24 மணி நேரமும் தனியார் நிறுவன செக்யூரிட்டி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனல் மின் நிலையத்தில் உள்ள பொருள் வைப்பு அறையில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான பல கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் மற்றும் நிக்கல் கலந்த குப்ரோ நீக்கல் பைப் உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பொருள் வைப்பு அறையில் கடந்த ஒன்பதாம் தேதி படகுமூலம் வந்து துளையிட்டு அதிலிருந்து 690 கிலோ எடை கொண்ட 829 எண்ணிக்கையிலான குப்ரோ நிக்கல் பைப் உள்ளிட்ட விலை உயர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய உதிரிபாகங்களை சிலர் திருடிச் சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் அங்கேயே இருந்து கடல் வழியாக படகு மூலம் 15-க்கு மேற்பட்ட கும்பல் இந்தப் பொருட்களை கடத்திச் சென்றுள்ளது.

திருட்டுச் சம்பவம் நிகழ்ந்து இரண்டு நாட்கள் கழித்து அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு தெரியவந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அனல் மின் நிலைய நிர்வாகம் பொருள் வைப்பு அறையை கண்காணிக்கும் ஊழியர்கள் நான்கு பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திருட்டு நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் மின் வாரிய லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடு போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture