குலசை தசரா விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. நேரில் ஆய்வு

குலசை தசரா விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. நேரில் ஆய்வு
X

குலசை முத்தாரம்மன் கோயிலில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும், வசதியையும் கருத்தில் கொண்டு, அவர்களின் நலனுக்காக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சில அறிவுப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்ற உலோகத்திலான எந்த பொருட்களையும் கொண்டு வருதல் கூடாது. அருள்மிகு முத்தாரம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கடவுள் சம்மந்தப்பட்ட படங்களை பக்தியோடு கொண்டு வருவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ, பக்தி பாடல்களை இசைப்பதற்கோ, கடவுள் சம்பந்தப்பட்ட பனியன்கள் மற்றும் உடைகளை அணிந்து வருவதற்கோ எவ்வித தடையும் இல்லை.

ஆனால், கடவுள் திருவிழாவில் ஜாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ, ஜாதி ரீதியான உடைகளை அணிந்து வரவோ, காவல்துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ எந்த வித அனுமதியும் இல்லை. அருவறுக்க தக்க வகையில் நடந்து கொள்வதற்கோ, நடனம் ஆடுவதற்கோ, அதிக சத்தத்துடன் டிரம்ஸ் அடித்து ஒலி எழுப்பி சுற்று சூழலுக்கு பங்கம் ஏற்படுத்துவதற்கோ, ஜாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் இசை ஏற்படுத்தவோ எவ்வித அனுமதியும் கிடையாது. மீறினால் சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திறந்த வாகனங்களில் அசாதாரண சூழலில் ஆட்களையோ - பக்தர்களையோ ஏற்றி வந்தால், அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுடைய வாகனங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு சட்டப்படியாக நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா தினம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் உட்பட வெவ்வேறு விழாக்களின்போது அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என 316 வாகனங்கள் மீது மோட்டார் வாகனச்சட்டம் மற்றும் குற்றவியல் நடவடிக்கையின்படி வழக்குகள் பதிவு செய்து பல லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்து, பல வாகனங்களும் சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் கடற்கரை, வாகன நிறுத்தங்கள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் மறைவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்கள் மற்றும் பொது மக்கள் வாகனங்களில் வந்து இறங்கி கடற்கரை சென்று கோவில் வந்து திரும்பி அவரவர் வாகனங்களுக்கு செல்லும் இடம் வரை சீருடை மற்றும் சாதராண உடைகள் அணிந்த ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

பொதுமக்கள் மற்றும் இதர சிறு வியாபாரிகள் உரிய அனுமதியின்றி சாலையோர சட்ட விரோதமாக கடைகள் அமைத்து போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்கள் தேங்குகின்ற நிலையை ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல்துறை முன் அனுமதியின்றி திருவிழா சம்பந்தமாக கோவில் பகுதிகள் மற்றும் எந்த தனியார் அல்லது பொது இடத்திலும் ஒலி பெருக்கி பயன்படுத்தவோ, ஆபாசமான ஆடல் பாடல் போன்ற சினிமா இசை நிகழ்ச்சிகள் நடத்தவோ எவ்வித அனுமதியும் இல்லை. மீறினால் சம்மந்தப்பட்ட இசைக்குழுவினர் மற்றும் அமைப்பாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்களை ஏற்றி வரும் தனியார் வாகன ஒட்டிகள் தற்காலிக வாகன நிறுத்தத்தில் குறுக்கு, நெடுக்காக வாகனங்களை நிறுத்தாமலும், வாகனத்தை சுற்றி கொட்டகை அமைக்காமலும், வாகனங்களை ஒழுங்காக சீரான முறையில் மற்ற வாகனங்கள் வந்து செல்ல இடமளித்து வாகனங்களை நிறுத்த வேண்டும்.

பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அவ்விடங்களில் அதிக நேரம் நிறுத்தி கொண்டு வாண வேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ, இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டோ பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாகன நிறுத்துமிடங்கள் அதிகமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். அனைத்து பொதுமக்களும் தசரா பண்டிகையை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகம், இந்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Next Story