தூத்துக்குடி மாவட்டத்தில் பிடியாணை வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. அறிவுரை
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின்போது, மாவட்டத்தில் பிடியாணைகள் நிறைவேற்றுவது குறித்து காவல்துறையினரிடம் ஆலோசனை செய்தபோது, கேட்ட கேள்விகளுக்கு பயனுள்ளதாகவும், சிறப்பான முறையிலும் பதிலளித்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் மகேஷ்குமார் என்பவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:
மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்களுக்கு நீதிமன்றத்தால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதை சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றி நீதிமன்ற விசாரணையை விரைந்து முடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெறுவதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.
ஒவ்வொரு காவல் நிலையங்களில் நிறைவேற்றம் செய்யாமல் உள்ள பிடியாணைகள் குறித்தும், அவற்றை நிறைவேற்றம் செய்ய முடியாததற்கான காரணங்கள் குறித்தும் கேட்டறிந்து, பிடியாணை எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 2 அல்லது 3 காவலர்கள் அடங்கிய தனிக்குழுவினர் அமைக்க வேண்டும்.
மேலும், பிடியாணைகள் நிறைவேற்றுவது சம்மந்தமாக எவ்வித இடர்பாடுகளோ, கூடுதலாக காவலர்கள் தேவைப்பட்டாலோ அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் அல்லது தன்னையோ நேரடியாக அணுகி தேவையான உதவிகளை பெற்று உடனடியாக பிடியாணைகள் நிறைவேற்ற வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu