/* */

பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒருங்கிணைந்த சேவை மையம்.. அமைச்சர் கீதாஜீவன் தகவல்...

பெண்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒருங்கிணைந்த சேவை மையம்.. அமைச்சர் கீதாஜீவன் தகவல்...
X

புகார் பெட்டியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தில், பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையிலான புகார் பெட்டி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புகார் பெட்டியை தனியார் நிறுவன உரிமையாளரிடம் வழங்கினார்.

தொடர்ந்து, பெண்ணியம் போற்றுவோம் என்ற தலைப்பில் பெண்களின் பாதுகாப்பிற்கான கையெழுத்துப் பிரச்சாரத்தினை துவக்கி வைத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:

முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சமூக நலத்துறையின் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள், குற்ற செயல்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை சமூக நலத்துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நாடகங்கள், பேரணிகள், பிரச்சாரங்கள் உள்ளிட்டவை தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

2013 ஆம் ஆண்டில் இருந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும், தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.

ஒவ்வொரு அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக குற்றங்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டு புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு இந்த சட்டம் வழிவகுக்கிறது. பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக அவர்கள் பணிபுரியும் இடம் இருக்க வேண்டும்.

பணிபுரியும் இடத்தில் பாதுகாப்புடன் இருந்தால் மனமகிழ்ச்சியோடு பணிபுரியலாம். இந்த சட்டத்தை பற்றி ஒவ்வொரு பெண்கள், குழந்தைகள், நமது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவை சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு இல்லமும் கட்டாயம் சமூகநலத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத இல்லங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

181 என்ற கட்டணமில்லா எண்ணில் அனைவரும் புகார் தெரிவிக்கலாம். ஒருங்கிணைந்த சேவை மையம் ஒன்று தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்படுத்த இருக்கிறோம். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த சேவை மையத்தில் தெரிவிக்கலாம்.

இந்த சேவை மையம் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு பெண்களின் வாழ்க்கைக்கு ஒரு பாலமாகவும் செயல்படும். 24 மணி நேரமும் இந்த மையம் செயல்படும். புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும்.

பெண்களுக்கான எல்லா உதவிகளும் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும். சமூதாயத்தில் பெண்களுக்கு எதிராக செயல்படும் அனைத்து புகார்களும் இந்த மையத்தில் பெறப்படும். அனைத்து பெண்களும் சவால்களை எதிர்கொள்பவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், வழக்கறிஞர் ஸ்வர்ணலதா, தனியார் மீன் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவன நிர்வாக இயக்குநர் செல்வின் பிரபு, நிறுவன ஊழியர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2022 12:54 PM GMT

Related News