திருச்செந்தூரியில் 3 கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

திருச்செந்தூரியில் 3 கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
X
திருச்செந்தூரில் உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கிய மூன்று சமோசா தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. உணவு பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையின் கீழ் சக்திமுருகன், காளிமுத்து மற்றும் ஜோதிபாசு ஆகிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவினையொட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள நடமாடும் தற்காலிக கடைகள் உள்ளிட்ட 60 உணவு வணிகர்களிடம் கடந்த இரண்டு நாட்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதிக நிறமி சேர்க்கப்பட்ட 3 கிலோ பஞ்சுமிட்டாய், 2 கிலோ சிக்கன் உள்ளிட்ட 25 கிலோ சட்டத்திற்குப் புறம்பான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அந்த ஆய்வின் போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், திருச்செந்தூரில் மொத்தமாக சமோசா தயாரிக்கும் டி.பி.ரோட்டில் உள்ள மஹாராஜா, எல்.எஸ் ஜூவல்லர்ஸ் அருகே பச்சைப்பெருமாள் மற்றும் மணல்மேடு பகுதியில் முருகேசன் என்பவர்களுக்குச் சொந்தமான சமோசா தயாரிக்கும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அந்த நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததினாலும், மிகுந்த சுகாதாரக் குறைபாடுடன் இருந்ததினாலும் மூன்று நிறுவனங்களின் இயக்கமும் உடனடியாக நிறுத்தப்பட்டு மூடப்பட்டன.

அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் கீழ் தங்களது வணிகத்திற்கு உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் இதற்கான இணையத்தளம்: https://foscos.fssai.gov.in என்பது ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவின் தரங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலக வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!