தூத்துக்குடியில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்திய பள்ளி நிர்வாகம்!
தூத்துக்குடி பண்டாரம்பட்டி பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றோர்.
பொதுவாக கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்குதான் பட்டமளிப்பு விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தூத்துக்குடியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்து வேறு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி உற்சாகப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பண்டாரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நெல்சன் பொன்ராஜ். நல்லாசிரியர் விருது பெற்ற நெல்சன் பொன்ராஜ் தலைமையாசிரியராக உள்ள இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் தனியார் பள்ளிக்கு இணையாக ஆங்கில வழியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகள் ஆங்கில வழி கல்வி பொம்மலாட்டம் கதைகள் மூலம் கல்வி என கல்வி கற்றுக் கொடுப்பதுடன் கொரோனா காலத்தில் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளி மேம்பாட்டிற்காக ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான கட்டிடத்தையும் பள்ளிக்கு ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் கட்டிக் கொடுத்துள்ளார்.
இதன்மூலம் இந்த பள்ளியில் மாணவர்களின் சேர்கையையயும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வேறு பள்ளிக்கு செல்லக்கூடிய 22 மாணவ மாணவிகளுக்கு கல்லூரிகளில் வழங்குவது போன்று பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் தேவி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார். விழாவில் பேசிய நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் இந்த பள்ளியில் படித்து வேறு பள்ளியில் சேர்ந்து படித்து வரும் மாணவ, மாணவிகளில் பத்தாம் வகுப்பில் 450-க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெறுவோருக்கு சிம்லாவுக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu