தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 38 பேருக்கு எஸ்.பி. பாராட்டு
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றுவோர் ஒவ்வொரு மாதமும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றியதாக 5 காவல் ஆய்வாளர்கள் உள்பட 38 பேருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நாலாட்டின்புதூர் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் மற்றும் 6 கண்ணக்களவு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஒருவர் என 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 6,85,000 மதிப்பிலான 17 பவுன் தங்க நகைகள் மற்றும் வீடியோ கேமரா ஆகியவை மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர், உதவி ஆய்வாளர் காந்தி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில், கயத்தாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலை முதல் நிலை காவலர் சுரேஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 7 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, உதவி ஆய்வாளர் ஸ்டான்லி ஜான், காவலர் வீரபெருமாள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சந்தேக மரண வழக்கை துரிதமான முறையில் விசாரணை செய்து சந்தேக மரணம் இல்லை என்றும் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் என்றும் கண்டுபிடித்து, கொலை செய்தவரை கைது செய்த வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், தலைமை காவலர் சண்முகநாதன், முதல் நிலை காவலர்கள் முத்தமிழ்ராஜ் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்டவருக்கு 20 வருடம் சிறைக்காவல் தண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் பெற்று தந்த வழக்கில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் மாரியம்மாள், பெண் தலைமை காவலர் மயில்கனி மற்றும் பெண் காவலர் ஜெபமேரி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்டவருக்கு எஞ்சிய ஆயுட்காலம் முழுவதும் சிறைதண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் பெற்று தந்த திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌரிமனோகரி, உதவி ஆய்வாளர் மேரி, பெண் தலைமை காவலர் லெட்சுமி, தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜபிள்ளை ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 1985 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 21 ஆண்டுகள் சிறையில் இருந்து பரோலில் வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள்தண்டனை கைதியை தேடிவந்த நிலையில் அவரை கைது செய்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவலர் விசு ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிடியாணையை நிறைவேற்றிய திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார், தலைமை காவலர் ராஜ்பரத் மற்றும் காவலர் மனோகரன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
லோக் அதலாத்தின்போது ஆறுமுநேரி காவல் நிலைய 76 வழக்குகளை நீதிமன்றத்தில் முடித்த ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் பரணிக்கும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய மோசடி வழக்கில் 2015 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவரை பிடித்து கொடுத்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் உலகநாதன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் முத்துமாரி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட 4 ரவுடிகளை கைது செய்து நிலையத்தில் ஒப்படைத்த கோவில்பட்டி கிழக்கு குற்ற பிரிவு தலைமை காவலர் சுப்பையா, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆறுமுகதுரை, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் அனுவிந்த்குமார் மற்றும் கடம்பூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் பூவரசு ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu