டாஸ்மாக் விற்பனை பாதிக்கும் என்பதால் கள் விற்பனைக்கு அனுமதி இல்லை: சீமான் குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நாளை தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தூத்துக்குடி வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விஷசாராயம் குடித்து இறந்தவர்கள் வீட்டிற்கு முதல்வர் சென்று 10 லட்சம் நிவாரணம் வழங்குகிறார். கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு ஏதாவது நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளதா?. கடலில் உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதா? ராணுவத்தில் வீர மரணம் அடைந்த வீரர்கள் வீட்டிற்கு முதல்வர் சென்றாரா?. மக்கள் வரிப்பணத்தை விஷசாராயம் குடித்தவர்களுக்கு அரசு வழங்குவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நிதி இல்லை என்கின்றனர். ஆனால் பேனா சின்னம் வைக்க எங்கிருந்து நிதி வருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது கோ பேக் மோடி என்பார்கள். ஆளுங்கட்சி ஆன பிறகு வெல்கம் மோடி என்பார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என்பது நமது இலக்கு. தமிழகத்தில் கள் விற்க ஏன் அனுமதிக்கவில்லை? கள் விற்பனை செய்தால் டாஸ்மார்க் வியாபாரம் பாதிக்கும். மற்ற மாநிலங்களில் கள் விற்பனை செய்ய அனுமதிக்கின்றனர். காரணம் அவர்களுக்கு பிராந்தி தொழிற்சாலைகள் இல்லை.
தமிழகத்தில் இனி கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில் போன்ற விஷத்தை குடிக்க வேண்டாம். அருகில் எங்கு விஷசாராயம் கிடைக்கிறது என்று பார்த்து குடித்தால் போதும் கஷ்டமும் தீர்ந்துவிடும் வீட்டிற்கு 10 லட்சம் ரூபாய் பணமும் கிடைத்து விடும் என்ற நிலை உள்ளது.
நான் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து விடுவேன் என்று ராகுல் காந்தி சொல்லவில்லை. நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு வாழ்த்துக்கள் தான் சொல்கிறார். இந்தி பேசும் மாநிலங்கள் தான் இந்தியா என்பது பாஜகவின் நிலைப்பாடு. எல்லை தாண்டி வருவதாக தமிழக மீனவர்கள் மீது மட்டும்தான் இலங்கை துப்பாக்கி சூடு நடத்துகிறது. கேரளா மீனவர்கள் எல்லை தாண்டி செல்ல வில்லையா?. இலங்கைக்கு எல்லை தாண்டுகிறார்கள் என்பது பிரச்னை அல்ல இனம் தான் பிரச்னை என சீமான் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu