தூத்துக்குடியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்!

தூத்துக்குடியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்!
X

பொதுப்பணித்துறை அலுவலகம் (கோப்பு படம்).

தூத்துக்குடி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு மூன்று லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் பரிசுப் பொருட்கள் மற்றும் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை காலங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அரசு அலுவலகங்களில் திடீரென சோதனை மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, தூத்துக்குடி வஉசி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சென்று சோதனை மேற்கொண்டனர்.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியளர் அலுவலகம் மூலம் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் கட்டும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த அலுவலகத்தின் மூலம் பல்வேறு பணிகளில் ஒப்பந்தங்கள் வழங்குவதற்கு லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளகவும், அந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணப் பரிமாற்றம் அனைத்தும் வங்கி மூலம் மட்டுமே என்பதால் ரொக்கப் பண செயல்பாடு ஏதும் இல்லாத நிலையில், அந்த அலுவலகத்தில் ரூபாய் 3 லட்சம் இருப்பதை கண்டுபிடித்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் சோதனை நடத்தினர். இதன் காரணமாக அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தூத்துக்குடியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!