தூத்துக்குடி மாவட்டத்தில் தவறாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் பார்வையிட்டார்.
மாம்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில், இயற்கைக்கு மாறாகவும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மாறான எத்திலீனை பயன்படுத்தியும் மாம்பழங்கள் பழுக்கவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்தி முருகன், காளிமுத்து, ஜோதி பாசு மற்றும் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள மாம்பழங்கள் விற்பனை செய்யும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கார்பைடு கல் கொண்டு எங்கும் மாம்பழங்களை பழுக்க வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதேவேளையில், தூத்துக்குடியில் உள்ள செல்லம் விலாஸ் என்ற மொத்த கனி விற்பனையாளரிடத்தில், 286 கிலோ மாம்பழங்களை அனுமதிக்கப்பட்ட எத்திலீன் கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அனுமதிக்கப்படாத முறையினால், பழுக்க வைக்கப்பட்டது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்து, மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.
இதுபோல், கோவில்பட்டியில் வி.எஸ்.எம் ஃப்ரூட்ஸ் என்ற நிறுவனத்தில் ஆய்வு செய்த பொழுது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் வழிகாட்டுதலுக்குப் புறம்பாக அனுமதிக்கப்பட்ட எத்திலீனை நேரடியாக மாம்பழத்தில் தெளித்த காரணத்தினால், 1480 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டு, கோவில்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:
மாம்பழத்தை செயற்கை முறையில் பழுக்க வைக்க விரும்புவார்கள், எத்திலீன் கியாஸ் சேம்பர் மூலமாக தான் பழுக்க வைக்க வேண்டும். எத்திலீன் கியாஸ் சேம்பர் இல்லாத இடங்களில், எத்திலீன் ஸ்பிரே பயன்படுத்தலாம். ஆனால், மாம்பழம் வைக்கப்படும் அறையில் முதலில் எத்திலீன் ஸ்பிரே செய்து, அதன் பின்னர் மாம்பழத்தை சுவற்றிலிருந்து 1/2 அடி தள்ளியும், அறையின் கொள்ளளவில் 75% வரை வைத்துவிட்டு, அறையை மூடிவிட வேண்டும். அடுத்த 24 மணி நேரம் கழித்து, அந்தக் கதவினைத் திறக்க வேண்டும்.
மாம்பழம் வாங்குவோர் நன்கு அறிந்த வியாபாரிகளிடம் வாங்க வேண்டும். மாம்பழத்தை வாங்கி வந்தவுடன், ஓடும் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். முடியும் எனில், ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊறவைத்தால், தோல் மேல் இருக்கக்கூடிய எத்திலீன் படிமம் நீங்கிவிடும்.
மாம்பழத்தின் தரங்கள் மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர்கள் புகராளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என மாரியப்பன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu