திருச்செந்தூர் கோயில் இணை ஆணையருக்கு எதிராக வருவாய் துறையினர் போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திரண்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர்.
தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 18 ம்தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கான பச்சை நிற பாஸ் 200 எண்ணிக்கையில் மட்டுமே அச்சிடப்பட வேண்டும். மேலும், இந்த நுழைவுச்சீட்டில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் இணை ஆணையர் ஆகியோரது கையெழுத்துட்டு விநியோகம் செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் கோவில் இணை ஆணையர் கார்த்திகேயன் தனிப்பட்ட முறையில் தனது கையெழுத்துடன் நுழைவுச்சீட்டு அச்சிட்டு வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும், இந்த நுழைவுச் சீட்டை கொடுத்து ஆயிரக்கணக்கில் ரூபாய் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் செந்தூர்ராஜன் கூறியதாவது:-
வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில், முறைகேட்டில் ஈடுபட்ட திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் இணை ஆணையர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இணை ஆணையரின் முறைகேட்டை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டம் தீவிர படுத்தப்படும் என தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் செந்தூர்ராஜன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu