உப்பளத் தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் ஊதிய உயர்வு கோரி தீர்மானம்

உப்பளத் தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் ஊதிய உயர்வு கோரி தீர்மானம்
X

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர் சங்க மாநாடு நடைபெற்றது.

தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் தினமும் ரூ. 700 சம்பளம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். உப்பளத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் சிஐடியு உப்பளத் தொழிலாளர் சங்கம் சார்பில், 17வது பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு, சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் உப்பள தொழிலாளர் சங்க தலைவர் பொன்ராஜ், உப்பள தொழிலாளர் சங்க செயலாளர் சங்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள உப்பள தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டின்போது, உப்பள தொழிலாளர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும், தமிழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகையை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், உப்பள தொழிலை பாதுகாக்க அரசு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், உப்பளத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியத் தொகையினை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், உப்பள தொழிலாளர் நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் சம்பளம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!