தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை
தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவர் இசக்கிராஜா பேசினார்.
தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாநில தலைவர் இசக்கி ராஜா தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் காதலிக்க மறுத்ததால் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சந்தியாவின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டிஎன்டி என ஒற்றை சான்றிதழ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும், 10.5 சதவீத உள் ஒதுக்கீடை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழகத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க பூரண மதுவிலக்கு மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தமிழக அரசு முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும், தமிழகத்தில் அதிகரித்து வரும் இளம் பெண்கள் கொலை சம்பவங்களை தடுக்க பெண்கள் பாதுகாப்பிற்கு என தனி சட்டம் உருவாக்க வேண்டும்,
மேலும், தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை தடுக்கும் வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும், சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை வைக்க வேண்டும், காவிரி பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu