இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் சேவைகளை பயன்படுத்த வேண்டுகோள்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் சேவைகளை பயன்படுத்த வேண்டுகோள்
X
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் 5 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் அனைத்து சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

அஞ்சல்துறையின் கீழ் துவங்கப்பட்டு உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கைத் திறப்பதன் மூலம் அனைத்து மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை நேரடிப்பலன் பரிமாற்றங்களின் கீழ்பெறலாம். 100 நாள் வேலை திட்டம் (தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்), பிரதம மந்திரி விவசாய திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன்றவற்றின் பயனாளிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கைத் தொடங்கலாம். எந்த அஞ்சலகங்களிலும் அவற்றின் பலன்களைப் பெறலாம். பல்வேறு அரசாங்க திட்டங்களின் பயனாளிகளுக்கு சேவை செய்வதே வங்கியின் முக்கிய நோக்கம்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டுவாசலில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் சேவையை வழங்கிவருகிறது. மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஜீவன் பிரமானின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர்கள் மூலம் இந்தச் சேவைகளைப் பெறலாம்.

தபால்காரர்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஆதார் சேவைகள் அளிக்கும் வசதியைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வது, மொபைல் எண்களைப் புதுப்பிப்பது, சேர்ப்பது போன்ற சேவைகளை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே வழங்கமுடியும்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ரூ. 399 மற்றும் ரூ. 396 இல் விபத்துக் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது விபத்தின் மூலம் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளை ஈடுசெய்வதற்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டம். இதன்மூலம் விபத்துகளினால் ஏற்படும் இழப்புகளுக்கு ரூ. 10 லட்சம் வரை காப்பீடு பெறமுடியும்.

மேலும், கொரோனா காலத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி AEPS வசதியைப் பயன்படுத்தி வீட்டு வாசலில் பணம் வழங்கி குடிமக்களுக்கு சேவை செய்துள்ளது. இந்த AEPS வசதியின் மூலம் இந்தியக் குடிமக்கள் தபால்காரரிடம் இருந்து எந்த வங்கிக் கணக்கில் இருந்தும் அவர்களது கைரேகையுடன் பணத்தை எடுக்கலாம்.

மூத்த குடிமக்களுக்கு சேவை செய்வதற்காக 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்தத் தொகையை தபால்காரர்கள் மூலம் அவர்களின் வீட்டு வாசலிலேயே இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழங்குகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!