தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு: எஸ்.பி. பாராட்டு
புளியம்பட்டி பகுதியில் உள்ள ஜாதிய அடையாளங்களை அழித்த பொதுமக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி உட்கோட்டம் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 9.8.2023 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் அனைத்து சமுதாய மக்களை ஒன்றினைக்கும் வகையில் அனைத்து சமுதாயத்தினரையும் கூட்டி சமூக நல்லிணக்கம் மற்றும் மாற்றத்தை தேடி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியம்பட்டி அக்கநாயக்கன்பட்டி, ஒட்டுடன்பட்டி, பூவாணி, சவலாப்பேரி, ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம், கொடியன்குளம், நாரைக்கிணறு, மருதன்வாழ்வு மற்றும் கொல்லங்கிணறு கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறையினரின் முன்னிலையில் பொதுமக்கள் ஜாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இதற்கிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு, புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலந்தா கிராமத்தில் ஊர் நாட்டாண்மை மணிமுருகன், சின்னத்துரை, சுடலைமணி, சரஸ்வதி உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கிராமத்தில் பொது இடங்களில் உள்ள ஜாதிய அடையாளங்களை அழிப்பதாக கூறி தங்கள் கிராமத்திலுள்ள 20 மின் கம்பங்கள், 5 நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை, ஒரு மேல் நிலை நீர்தேக்க தொட்டி, பேருந்து நிறுத்தம் மற்றும் அடிகுழாய் ஆகியவற்றில் இருந்த ஜாதிய அடையாளங்களை வெள்ளை நிற பெயிண்ட் கொண்டு அழித்தனர்.
இதேபோல் சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் கிராம நாட்டாண்மை பெருமாள் மற்றும் முருகன் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கிராமத்தில் பொது இடங்களில் உள்ள ஜாதிய அடையாளங்களை அழிப்பதாக கூறி தங்கள் கிராமத்திலுள்ள 25 மின் கம்பங்கள், நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை, , மின்வாரிய டிரான்ஸ்பார்மர், மேல் நிலை நீர்தேக்க தொட்டி, குடிநீர் மோட்டார் ரூம் மற்றும் அடிகுழாய் ஆகியவற்றில் இருந்த ஜாதிய அடையாளங்களை வெள்ளை நிற பெயிண்ட் கொண்டு அழித்தனர்.
காசிலிங்காபுரம் கிராமத்தில் கிராம நாட்டாண்மை விஜி, சின்னத்துரை பத்ரன், பஞ்சாயத்து துணை தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் அய்யாத்துரை உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கிராமத்தில் பொது இடங்களில் உள்ள ஜாதிய அடையாளங்களை அழிப்பதாக கூறி தங்கள் கிராமத்திலுள்ள 28 மின் கம்பங்கள், 8 நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை, மின்வாரிய டிரான்ஸ்பார்மர், இரண்டு தரைப்பாலம் மற்றும் அடிகுழாய் ஆகியவற்றில் இருந்த ஜாதிய அடையாளங்களை வெள்ளை நிற பெயிண்ட் கொண்டு அழித்தனர்.
ஆலந்தா கிராமம், சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம் ஆகிய கிராமங்களில் 73 மின் கம்பங்கள், 16 நெடுஞ்சாலைத்துறை அடையாளப் பலகை, 2 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 4 அடிகுழாய், 2 மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள், 2 தரைப்பாலங்கள், குடிநீர் மோட்டார் மற்றும் பேருந்து நிறுத்தம் என 101 இடங்களிலிருந்த ஜாதிய அடையாளங்களை அழித்துள்ளனர்.
ஜாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu