தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழந்த 22 பேரின் வாரிசுதாரர்களிடம் நிவாரண உதவித்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த மழை காரணமாக 22 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, உயிரிழந்த 22 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவித்தொகையையும், வீடுகள் சேதமடைந்த 16 குடும்பங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிவாரண உதவித்தொகையையும் என மொத்தம் 38 நபர்களுக்கு ஒரு கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகைகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மிகப்பெரிய கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக கிட்டத்தட்ட 31 உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருக்கிறார்.
முதற்கட்டமாக 22 குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கி இருக்கிறோம். அதுபோல் வீடு இழந்தவர்கள் என்று 4883 பேர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் முதற்கட்டமாக இன்று 16 நபர்களுக்கு ரூ. 10000 நிவாரணத் தொகை வழங்கி இருக்கிறோம். இன்னும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஏரல் பகுதியில் இருக்கிற வணிகர்களை சந்தித்தபோது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய ஒரு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். மனு கொடுத்திருக்கிறார்கள். அதையும் ஆய்வு செய்வோம்.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் முழுவதுமாக கணக்கெடுத்துவிட்டு மனித உயிரிழப்பு, மாடு உயிரிழப்பு, வீடு இழப்பு, கன்று, கோழி, எருமை, காளை இப்படி பல்வேறு உயிரிழப்புகளுக்கு கிட்டத்தட்ட நிவாரணத் தொகை மட்டும் ரூ. 18 கோடி தேவைப்படுகிறது. இதில் ஆய்வு செய்து ஒவ்வொரு கட்டமாக தொடர்ந்து கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்களில் அநேக நபர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள். மூன்று முகாம்களில் மட்டும் மக்கள் தங்கியிருக்கிறார்கள். மின்வசதி கிட்டத்தட்ட 98 சதவிகித இடங்களில் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 3 நாட்களில் முழுமையாக இயல்பு நிலைக்கு வரும்.
கிட்டத்தட்ட 200 வருடங்களாக பெய்யாத ஒரு மழை தற்போது பெய்திருக்கிறது. எல்லா விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; எடுக்கப்பட்டும் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மழை பெய்யும்போதும், வெள்ளம் வரும்போதும் எல்லோருமே களத்தில் இறங்கி பணியாற்றினார்கள். தற்பொழுதும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu