தூத்துக்குடியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மீனவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மீனவருக்கு 10 ஆண்டுகள் சிறை
X

10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர் டால்வின்.

தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட மீனவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளியான டால்வின் (37) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து கடந்த 03.02.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் குற்றம்சாட்டப்பட்ட டால்வினுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசின் பாதிக்கபட்ட குழந்தைகள் இழப்பீடு நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி மாதவ ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ரேவதி, எல்லம்மாள் ஆகியோருக்கும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் ரபீலா குமாரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர் டால்வின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்