தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் பங்கேற்பு

தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியையும், மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மில்லர்புரத்தில் வ.உ.சி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியையும், மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தையும் மாவட்டஆட்சியர் லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசியதாவது:

மழைநீர் சேகரிப்பு என்பது எதிர்காலம் பயன்பாட்டிற்காக மழைபொழியும் போது மழைநீர் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுவது ஆகும். மழைநீர் சேகரிப்புத் திட்டம் நகர்ப்புறங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தவும் மற்றும் மழைவெள்ளத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.


பேரணியின்போது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பாராமரிக்கும் முறைகள், கூரையின் மேல் விழும் மழைநீரை சேகரித்தல், திறந்தவெளி கிணறு மூலம் மழைநீரை சேகரித்தல், குழாய் கிணறு மூலம் மழைநீரை சேகரித்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரசு அலுவலகக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தனியார் கட்டிடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழைநீரை முழுமையாக சேகரித்து மாவட்டத்தில் நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது குறித்தும், மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் அவசியம் குறித்தும் குறும்படம் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் வாயிலாக ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின்போது, களநீர் பரிசோதனை மேற்கொள்வது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டார். மேலும், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்துபொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு பள்ளி மாணவர்களுக்கு அவர் வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு பேரணி வ.உ.சி. கல்லூரி முன்பாக தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று ராஜாஜி பூங்காவில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ராஜா, உதவி நிர்வாகப் பொறியாளர் ஜான்செல்வம், இளநிலை நீர் பகுப்பாய்வாளர் வினோத்குமார், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மரியஜோசப் அந்தோணி, அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!