தூத்துக்குடி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி-திருநெல்வேலி நான்கு வழிஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் முறையாக பெய்யாத பருவமழையால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் தற்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீரும் குறைவான அளவே வருவதால் 500-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதற்கிடையில் தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து 3 ஆவது மற்றும் 4 ஆவது பைப் லைன் திட்டம் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வல்லநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வல்லநாடு பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் வல்லநாடு பஜார் பகுதியில் திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரும், பல்வேறு துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் தூத்துக்குடி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு பகுதியில் பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலையின் இருபுறமும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாற்றுப்பாதை வசதி இல்லாததால் வாகன ஓட்டிகளும், வாகனத்தில் பயணம் செய்தோரும் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu