ஆத்தூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கும் பணியை ஓசூர் அசோக் லேலண்ட் (யூனிட் 2) எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்று கரையோரம் உடைப்பு ஏற்பட்டு வடக்கு ஆத்தூர் பகுதியில் அதிகமான வெள்ளநீர் தெருக்களிலும், வீடுகளிலும், பஜார் கடை முழுவதும் வெள்ளம் புகுந்தது.
தொடர்ந்து 5 நாட்கள் வெள்ள நீர் வடியாமல் அப்படியே நின்றது. அனைத்து உடைமைகளையும் வெள்ளநீர் அடித்து சென்றதால் இந்தப் பகுதியில் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் அடைந்து பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
இதை அறிந்து ஓசூர் அசோக் லேலண்ட் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வடக்கு ஆத்தூர் குச்சிகாடு அருகே ஜே ஜே நகர் (தூய்மை பணியாளர் பகுதியில்) வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி தலைமை தாங்கினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன உதவி மேலாளர் சிவக்குமார், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி, மதர் சமூக சேவை நிறுவனத் துணைத் தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக ஓசூர் அசோக் லேலண்ட் (யூனிட் 2) எம்ப்ளாஸ் யூனியன் செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வடக்கு ஆத்தூர், குச்சிக்காடு , ஜே ஜே நகர் (தூய்மை பணியாளர் குடியிருப்பு) கைலாசபுரம், குரும்பூர், அங்கமங்கலம், மயில் ஓடை, சுப்பிரமணியபுரம், செல்வரத்தினம் நகர் (தூய்மை பணியாளர் குடியிருப்பு) வளவன் நகர், எழுவரை முக்கி, ஆனந்தபுரம், இந்திரா நகர், கல்விளை, வீரபாண்டியபட்டினம், சுனாமி நகர், மற்றும் தண்ணீர் பந்தல் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 1500 ரூபாய் மதிப்புள்ள போர்வை, துண்டு, அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் மற்றும் பிஸ்கட் வகைகள் மொத்தம் 1000 குடும்பங்களுக்கு ரூ 15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu